Change the Font size

Saturday, April 14, 2012

ஓவியக் கலை

 ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி,கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.
ஒவ்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும் இம்மூன்று சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றன. 'ஓவியனுள்ளத் துள்ளியது வியப்போன்'
எனக்கூறும் மணிமேகலைச் செய்யுள் வரியிலிருந்து தமிழக ஓவியர்கள் புறக்கண் கண்டதை அகக்கண் கொண்டு நோக்கி, அதை அகத்தினின் தீட்டி பின்னர் பிற ஊடகங்களில் வரைந்தனர் என்பது புலனாகிறது.
நிறம் தீட்டாமல் வரையும் ஓவியத்துக்கு புனையா ஓவியம் (Outline drawing) என்று பெயர். 'புனையா ஓவியம் கடுப்ப' என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
ஓவியத் தொழிலுக்கு 'வட்டிகைச் செய்தி' என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்றால் துகிலிகை (brush).
ஓவியங்களாக இன்று காண்பவற்றுள் மிகப் பழைமைமிக்கவை பல்லவர் காலத்து ஓவியங்களே.
ஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தைஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல்சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.

No comments:

Post a Comment