இராமாயணம்வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்[1]. இது கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின்
முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின்இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமானஅயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.
இராமாயணம் என்னும் பெயர் இராமன், ஆயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். ஆயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.
No comments:
Post a Comment